மீனவர்களுக்கு ஆதரவாக மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சேதுபாவாசத்திரம் மீனவர்களுக்கு ஆதரவாக மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-08-31 23:35 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் எந்தவித ஆதாரமும் இன்றி 5 விசைப்படகு மீனவர்கள் மீது இரட்டைமடி வலை பயன்படுத்தியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி அனுமதி டோக்கன், மானிய டீசல் வழங்க மீன்வளத்துறையினர் மறுத்து விட்டனர். ஆதாரமின்றி தவறான தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி கடந்த 25-ந் தேதி முதல் 7-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் விசைப்படகு மீனவர்களின் ஆலோசனை கூட்டம் கள்ளிவயல்தோட்டம் மீனவர் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனவ சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சேதுபாவாசத்திரத்தில் ஆதாரமின்றி மீனவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு 5 விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 படகுகளில் மீன்பிடி தொழிலுக்கே செல்லாத பரமசிவம், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான 2 படகுகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்சியளிக்கிறது. எனவே சேதுபாவாசத்திரம் மீனவர்களுக்கு ஆதரவாக மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் விசைப்படகு மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. ஆதாரமின்றி படகுகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது. நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி விசைப்படகுகள் திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும், மற்ற தினங்களில் நாட்டுப்படகுகளும் மீன்பிடிதொழில் செய்ய வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தை மீறி நாட்டுப்படகு மீனவர்கள் தினந்தோறும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இதை மீன்வளத்துறை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் முதல் நாள் கடலுக்கு செல்லும் நாட்டுப்படகுகள் மறுநாள் காலை கரை திரும்ப வேண்டும் மூன்று பாகத்தில்தான் தொழில் செய்ய வேண்டும் என்ற நடைமுறையை கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளுக்குநாள் விஷம்போல் ஏறிவரும் டீசல் விலையை மத்திய- மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 23.7.2018 இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 2 நாட்டுப்படகுகளையும் மீட்டுத்தர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த 301 விசைப்படகுகளும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். படகுகள் அனைத்தும் மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்