மைசூரு மாநகராட்சி தேர்தலில் 65 சதவீத வாக்குப்பதிவு மண்டிமொகல்லாவில் போலீஸ் தடியடி-பரபரப்பு
65 வார்டுகளை உள்ளடக்கிய மைசூரு மாநகராட்சிக்கு நேற்று தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவானது.
மைசூரு,
65 வார்டுகளை உள்ளடக்கிய மைசூரு மாநகராட்சிக்கு நேற்று தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவானது. மண்டிமொகல்லாவில் அரசியல் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு மாநகராட்சி தேர்தல்
கர்நாடகத்தில் மைசூரு, சிவமொக்கா, துமகூரு மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதுபோல் 65 வார்டுகளை உள்ளடக்கிய மைசூரு மாநகராட்சிக்கும் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் மக்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை. இதனால் வாக்குச்சாவடிகள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இதனால் காலை 9 மணி நிலவரப்படி மைசூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் 20 முதல் 30 பேர் வரை மட்டுமே வாக்குகளை பதிவு செய்திருந்தனர். வாக்குப்பதிவு மந்தமாக இருந்ததால், மதியம் 2 மணி வரை 25 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சி தேர்தலையொட்டி என்.ஆர்.மொகல்லா, உதயகிரி, மண்டிமொகல்லா, பன்னிமண்டபம், தேவராஜா அர்ஸ் ரோடு, சயாஜீராவ் ரோடு உள்பட பல இடங்களில் கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் அந்தப் பகுதி மக்கள் நடமாட்டமின்றி முழுஅடைப்பு போல் காட்சி அளித்தது.
போலீஸ் தடியடி
மண்டிமொகல்லாவில் அமைக்கப்பட்டு இருந்த 27-வது எண் வாக்குச்சாவடியில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளின் தொண்டர்கள் பொதுமக்களிடம் தங்களது கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தினர். இதுதொடர்பாக 3 கட்சிகளின் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டானது. இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதன் காரணமாக அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
என்.ஆர்.தொகுதி எம்.எல்.ஏ. தன்வீர்சேட் உதயகிரி வாக்குச்சாவடியிலும், கே.ஆர். தொகுதி எம்.எல்.ஏ. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. சோமசேகர் ஆகியோரும் கிருஷ்ணராஜாவில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர். மைசூரு மகாராணி பிரமோதாதேவி, கில்லர் மொகல்லாவில் உள்ள ஸ்ரீகாந்தா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். காலை 7 முதல் மதியம் 2 மணி மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பகல் 3 மணிக்கு பிறகு விறு,விறுப்பானது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
65 சதவீத வாக்குப்பதிவு
மாலை 5 மணி நிலவரப்படி மைசூரு மாநகராட்சி தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 3-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.