தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்,
கம்பம் கெஞ்சயன் குளம் ஆலமரம் மேற்குதெருவை சேர்ந்தவர் அறிவுச்செல்வன் (வயது 35). இவர் காஞ்சீபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு நிரஞ்சனா என்ற மனைவியும், அனுஸ்ரீ, தனுஸ்ரீ என 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் கம்பத்தில் வசித்து வருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் தனியாக வசித்து வந்த அறிவுச்செல்வன் வாரம் ஒருமுறை குடும்பத்தை பார்க்க ஊருக்கு வந்து செல்வார். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது உடன் பிறந்த தம்பி கார்த்திக் செல்வம் இறந்து விட்டார். இது அறிவுச்செல்வனை மிகவும் பாதித்தது. தம்பி இறந்த துக்கம் தாங்கமுடியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை மனைவி கண்டித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டிற்கு வந்தபோது மது குடித்துவிட்டு தம்பியை நினைத்து அழுது புலம்பியுள்ளார். அப்போது குடிப்பழக்கத்தை கைவிடுமாறு மனைவி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அறிவுச்செல்வன் வீட்டின் அறையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறிவுச்செல்வம் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.