இந்த மாதம் 3-வது வாரத்தில் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு

இந்த மாதம் 3-வது வாரத்தில் கர்நாடக மந்திரிசபையை விஸ்தரிப்பது என்று சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;

Update: 2018-08-31 23:00 GMT
பெங்களூரு, 

இந்த மாதம் 3-வது வாரத்தில் கர்நாடக மந்திரிசபையை விஸ்தரிப்பது என்று சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டணி ஒருங்கிணைப்பு குழு

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி கடந்த மே மாதம் அமைந்தது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பதவி ஏற்றனர். இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் உறுப்பினர்களாக காங்கிரஸ் சார்பில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி, ஜனதா தளம்(எஸ்) தேசிய பொதுச் செயலாளர் டேனிஷ்அலி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இந்த ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் கடந்த ஜூன் 14-ந் தேதி யும், 2-வது கூட்டம் ஜூலை மாதம் 2-ந் தேதியும் நடைபெற்றது.

கூட்டணியில் குழப்பம்

இந்த நிலையில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சித்தராமையா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாசன் மாவட்டத்தில் பேசுகையில், மீண்டும் நான் முதல்-மந்திரியாவேன் என்று கூறினார். சித்தராமையாவின் இந்த பேச்சு கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி குமாரசாமி கடும் அதிருப்தி அடைந்தார். கூட்டணியில் குழப்பம் எழுந்ததை அடுத்து சித்தராமையா தனது கருத்துக்கு விளக்கம் அளித்தார். அடுத்த முறை நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் நான் முதல்-மந்திரியாவேன் என்று கூறியதாக சொன்னார்.

இதற்கிடையே டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குமாரசாமி, அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, சித்தராமையா தேவையற்ற கருத்துகளை கூறி கூட்டணியில் குழப்பம் விளைவிப்பதாக புகார் தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் 3-வது கூட்டம் பெங்களூரு குமரகிருபா விருந்தினர் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

மந்திரிசபை விஸ்தரிப்பு

குழுவின் தலைவர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், ஜனதா தளம்(எஸ்) தேசிய பொதுச் செயலாளர் டேனிஷ்அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மந்திரிசபை விஸ்தரிப்பு, வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மந்திரிசபையை செப்டம்பர் மாதம் 3-வது வாரத்தில் விஸ்தரிப்போம். வாரிய தலைவர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம். உள்ளாட்சி தேர்தலை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தோழமை போட்டியுடன் தனித்தனியாக எதிர்கொண்டது. இதில் எந்த நகரங்களில் காங்கிரஸ் அதிக வார்டுகளில் வெற்றி பெறுகிறதோ அதில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவியும், ஜனதா தளம்(எஸ்) அதிக இடங்களில் வெற்றி பெற்றால், அந்த கட்சிக்கு தலைவர் பதவியும் வழங்குவது என்று முடிவு செய்துள்ளோம்.

உண்மைக்கு புறம்பானவை

ஒருவேளை இரு கட்சிகளும் சமநிலையை அடைந்தால், கட்சி தலைவர்கள் பேசி தலைவர் பதவி யாருக்கு என்று முடிவு செய்வார்கள். இந்த கூட்டத்தில் இந்த முக்கிய முடிவை எடுத்தோம். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் இது தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. அதில் உண்மை கிடையாது.

ஹாசனில் நான் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசும்போது, நீங்கள் முதல்-மந்திரியாக வேண்டும் என்று குரல் எழுப்பினர். அதற்கு நான், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று சொன்னேன். இதில் என்ன தவறு உள்ளது?. நீங்கள் (ஊடகங்கள்) தான் இதற்கு பல்வேறு அர்த்தங்களை கற்பித்து, குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

நிவாரண பணிகள்

குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்ய நிவாரண பணிகளை இன்னும் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கூறியுள்ளேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இந்த கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்பு சித்தராமையா வீட்டில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்