ஆதிதிராவிடர்- பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் அரசு திட்டங்கள் பற்றி ஆய்வு கூட்டம்

கரூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மத்திய- மாநில அரசு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2018-08-31 22:30 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய- மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தேசிய பட்டியல் வகுப்பினர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தின் போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக கரூர் மாவட்டத்தில்

செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், ஆதி திராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்விக்கடன்கள் குறித்தும், வன்கொடுமை தடுப்பின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசின் திட்டங்களான பாரதப்பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், தனிநபர் இல்ல கழிப் பறைகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், தேசிய பட்டியல் வகுப்பினர் ஆணைய துணைத்தலைவர் விரிவாக கேட்டறிந்தார். மேலும் இந்த திட்டங்களின் மூலம் பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்தும் அவர் விசாரித்தார்.

அதனை தொடர்ந்து 5 நபர்களுக்கு தலா ரூ.3,500 வீதம் ரூ.17,500 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும், 10 நபர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 5 நபர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகைக்கான காசோலைகளையும் என மொத்தம் 20 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தேசிய பட்டியல் வகுப்பினர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி ஜெ.பாலசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் முதுநிலை விசாரணை அலுவலர்கள் இனியன், லிஸ்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்