வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து பொன்னேரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து பொன்னேரி தாசில்தார் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
பொன்னேரி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் அலமாதி வருவாய் கிராமத்தில் கிருஷ்ணா நகர் உள்ளது. இந்த நகரில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் 40 சென்ட் பனந்தோப்பு வகைப்பாடு நிலம் இருந்தது. இதில் 98 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
தனியார் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்ததன் பேரில் பொன்னேரி வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தமிழ்நாடு 1905 ஆம் ஆண்டு மூன்றாவது சட்டத்தின் 7-வது பிரிவின்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
முற்றுகை
இதனை எதிர்த்து நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து பொன்னேரி தாசில்தார் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த மண்டல துணை தாசில்தார் அருள்வளவனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில் தமிழக அரசின் சலுகைகளான ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, சாலைவசதி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெற்று வருகிறோம். எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதை தடுத்து எங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.