ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கிய வேலையை கல்வி தகுதிக்கு ஏற்ப மாற்ற வேண்டும்

ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கிய வேலையை கல்வி தகுதிக்கு ஏற்ப மாற்றி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2018-08-31 23:30 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மீன்வளத்துறை துணை இயக்குனர் லேமக் ஜெயக்குமார், வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதிக் தயாள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானோருக்கு அங்கன்வாடியில் பணி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் என்ஜினீயரிங் படித்தவர்களும் அங்கன்வாடியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு வழங்கிய வேலையை கல்வி தகுதிக்கு ஏற்ப மாற்றி வழங்க வேண்டும். மேலும், பணி வழங்கப்பட்டுள்ள அங்கன்வாடிகள் வெகு தொலைவில் உள்ளன. இதனால் தினமும் வேலைக்கு சென்று வர சிரமமாக இருக்கிறது. எனவே மீனவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே பணி வழங்க வேண்டும்.

கேரள மாநிலத்தில் விசைப்படகில் கப்பல் மோதிய விபத்தில் ராமன்துறை, முள்ளூர்துறை மற்றும் கீழமணக்குடி பகுதிகளை சேர்ந்த சில மீனவர்கள் இறந்தனர். ஆனால் சில மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் மாயமாகி உள்ளனர். எனவே அவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ. சார்பில் பெரியவிளையில் 13 நாட்களில் 52 ஆயிரம் டன் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி மணலில் இயற்கையாகவே கதிர்வீச்சு இருப்பதால் மணலை அள்ளி கதிர்வீச்சை பிரித்தெடுக்கிறார்கள். ஆனால் கதிர்வீச்சை பிரித்த பிறகு கழிவு மணலை மீண்டும் அதே இடத்தில் கொட்டுவது இல்லை. இதனால் கடலரிப்பு ஏற்படுகிறது. மேலும் மக்களை கொண்டு தான் மணல் அள்ள வேண்டும். ஆனால் தற்போது பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் அள்ளுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் குமரி மாவட்டத்தின் வளம் அழிக்கப்பட்டுவிடும். எனவே ஐ.ஆர்.இ. நிறுவன பணிகளை பார்வையிட 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

கோவளத்தில் மாதா சிலையை உடைந்தவர்களை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மணக்குடி ரவுண்டானாவின் மேற்கு பக்கம் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே சாலையை விரிவாக்கம் செய்வது அவசியம்.

இவ்வாறு மீனவ பிரதிநிதிகள் கூறினர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியபோது கூறியதாவது:-

ஒகி புயலில் பலியான மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கியபோது முதலில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் எந்த பணி வேண்டும்? என்று கேட்கப்பட்டது. பின்னர் அவர்களின் சம்மதத்திற்கு பிறகு தான் அந்தந்த இடங்களில் பணி வழங்கப்பட்டது. மீனவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே உள்ள அங்கன்வாடிகளிலும் வேலை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐ.ஆர்.இ. நிறுவனம் கடந்த 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இப்போது தான் குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்கள். இதுதொடர்பாக அறிவியல் பூர்வமாக தான் ஆய்வு நடத்த முடியும்.

கோவளத்தில் மாதா சிலையை உடைத்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மணக்குடி சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை வைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையில் வண்ணம் தீட்டுவது மற்றும் அறிவிப்பு பலகை வைப்பது உள்ளிட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் மீனவர்கள் திரளாக கலந்துகொண்டு கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது மீனவர்கள் குமரி மாவட்டத்தில் 3 அடுக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே 3 அடுக்கு வலை பயன்படுத்த கூடாது என்று அறிவிக்கப்பட்டது. எனினும் 3 அடுக்கு வலை பயன்படுத்துவது குறித்து நாளை(அதாவது இன்று) முடிவு செய்யப்படும் என்றார். இதைதொடர்ந்து கேரளாவில் மீட்புப்பணியில் ஈடுபட்ட குமரி மீனவர்கள் 20 பேருக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

மேலும் செய்திகள்