வங்கி அதிகாரி போல் செல்போனில் பேசி வங்கி கணக்கில் ரூ.8 ஆயிரம் மோசடி

வங்கி அதிகாரி போல் செல்போனில் பேசி ரூ.8 ஆயிரம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2018-08-31 20:42 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் குப்பன் (வயது 56). தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார்.

இவரது செல்போனுக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு மர்ம நபர், தங்களது வங்கி கணக்கு உள்ள வங்கியின் துணை மேலாளர் பேசுவதாகவும், தங்களது ஏ.டி.எம். கார்டை புதுப்பித்து தர கார்டு எண்ணை தெரிவிக்குமாறு கூறினார். அச்சம் அடைந்த குப்பன், முதலில் கார்டு எண்ணையும், அடுத்து தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் மர்ம ஆசாமிக்கு செல்போனில் தெரிவித்தார்.

அடுத்த 10 நிமிடத்திற்குள் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.8 ஆயிரத்துக்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்கியது போல செல்போனுக்கு ஒரு தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த குப்பன் உடனடியாக வங்கிக்கு சென்று விளக்கம் கேட்டார். வங்கி அதிகாரிகள் விளக்கத்துக்கு பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டதை குப்பன் உணர்ந்தார்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் குப்பன் புகார் மனு அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார், அந்த மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்