மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு: ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.;
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், மதியம் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவில் நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலையில் 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது.
மதியம் 12 மணிக்கு பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் கேரள மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து கலந்து கொண்டு பானைகளில் பொங்கலிட்டு அம்மனை வழி பட்டனர். பொங்கல் வழிபாட்டை வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம சைதன்யானந்தா மகாராஜ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் அன்பு மணி, தேவசம் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், மராமத்து பொறியாளர் அய்யப்பன், மண்டைக்காடு பேரூராட்சி முன்னாள் தலைவி மகேஸ்வரி முருகேசன் மற்றும் இந்து சேவா சங்கம், ஸ்ரீதேவி கலா மன்றம், தேவி சேவா சங்க நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மதியம் உச்ச பூஜை, சிறப்பு அன்னதானம் போன்றவை நடந்தது.
விழாவில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு சமய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் தேவி சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.