சுவைப் எந்திரம் மூலம் மோசடியாக புதுவையில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சம் திருட்டு

புதுவையில் வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து சுவைப் எந்திரத்தை பயன்படுத்தி மோசடியாக ரூ.15 லட்சம் திருடப்பட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-31 23:15 GMT

புதுச்சேரி,

புதுவையில் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பெருமளவு பணம் மோசடி செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா, லாஸ்பேட்டை லட்சுமிநகரை சேர்ந்த பாலாஜி உள்பட 16 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுவைப் எந்திரங்கள், போலி ஏ.டி.எம். கார்டுகள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. புதுவையில் இந்த மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே புதுவை நகரின் மையப்பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான பேங்க் ஆப் இந்தியா கிளை வாடிக்கையாளர்கள் 2 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சம் மோசடியாக திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த வங்கி நிர்வாகம் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில், ‘எங்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ள 2 வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே சுவைப் எந்திரத்தை பயன்படுத்தி மோசடியாக ரூ.15 லட்சம் திருடப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புதுவையில் ஏற்கனவே பிடிபட்ட போலி ஏ.டி.எம். கார்டு மோசடி கும்பலுக்கு இந்த திருட்டில் தொடர்பு உள்ளதா? அல்லது இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து மோசடியாக சுவைப் எந்திரத்தை பயன்படுத்தி ரூ.15 லட்சம் திருடப்பட்டு இருப்பது மற்ற வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்