சென்னையில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது
சென்னையில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு ஜி.எம்.பேட்டையை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 34). இவர், தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அஜித்குமார் கையில் இருந்த செல்போனை பறித்துச்சென்று விட்டனர். இதுபற்றி மர்மநபர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் பதிவு எண்ணுடன் காசிமேடு போலீசில் அஜித்குமார் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோட்டார்சைக்கிள் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(வயது 23) மற்றும் கொருக்குப்பேட்டைய சேர்ந்த மணிகண்டன் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்ச்செல்வன் மீது ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளன.
மேலும் இவர்கள், ராயபுரம் மேம்பாலம் அருகே நடந்து சென்ற சித்ரா என்ற பெண்ணிடமும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்ச்செல்வன், மணிகண்டன் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கொளத்தூர்
சென்னை கொளத்தூர் குமரன் நகர் ரமணிபாய் காலனியில் வசிப்பவர் முருகேசன். இவருடைய மகன் ஸ்ரீதர்(16). இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள வெற்றிநகர் சந்திப்பில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது கையில் அரிவாளுடன் ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஸ்ரீதரை மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்துச்சென்று விட்டனர்.
இதேபோல் திரு.வி.க. நகர் பல்லவன் சாலையில் வசிப்பவர் தென்னரசு(38). இவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கோழிகள் வாங்க பல்லவன் சாலையில் நடந்து சென்றபோது, ஆட்டோவில் வந்த அதே 6 பேர் கும்பல் தென்னரசுவிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.1,500 பறித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
அப்போது தென்னரசுவின் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர். உடனே அந்த கும்பல், அருகில் டீக்கடையில் இருந்த கண்ணாடி டம்ளர்களை எடுத்து அவர்கள் மீது வீசியதுடன், தங்களிடம் இருந்த அரிவாள்களை காட்டியவாறு ஆட்டோவில் தப்பிச்சென்று விட்டனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 சம்பவங்களும் நடந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 6 பேர் கொண்ட கும்பலை அடையாளம் கண்டனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து உதவி கமிஷனர் அரிக்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் தலைமையில், போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீஸ்காரர் மகேஷ் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் திரு.வி.க. நகர், தாங்கல் சுடுகாட்டில் அரிவாளுடன் பதுங்கி இருந்த வெற்றிநகரைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன்(20), திரு.வி.க. நகர் கோபாலபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(21), அஜித்குமார்(22), பெரம்பூர் கே.சி.கார்டன் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ்(21), பெரவள்ளூரைச் சேர்ந்த திவாகர்(20) மற்றும் தங்கராஜ் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற வெள்ளை கார்த்திக்(19) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 அரிவாள்கள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.1,500, கொள்ளை அடிக்க பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.