நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் தபால் துறை வங்கி சேவை இன்று தொடக்க விழா

நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் தபால் துறை வங்கி சேவை இன்று (சனிக்கிழமை) முதல் செயல்பட தொடங்குகிறது என்று நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை மேலாளர் சாந்தகுமார் கூறிஉள்ளார்.

Update: 2018-08-31 21:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் தபால் துறை வங்கி சேவை இன்று (சனிக்கிழமை) முதல் செயல்பட தொடங்குகிறது என்று நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை மேலாளர் சாந்தகுமார் கூறிஉள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கி சேவை

“இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க்” எனப்படும் தபால் துறையின் வங்கி சேவை இன்று (சனிக்கிழமை) டெல்லியில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை அஞ்சல் கோட்டத்தில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம், களக்காடு துணை தபால் நிலையம், பத்தை, சிங்கம்பத்து, படலையார்குளம் ஆகிய கிளை தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடங்கப்படுகிறது. பாளையங்கோட்டை தலைமை தபால் நிலைய வளாகத்தில் மேலும் ஒரு வங்கி கிளையும் செயல்படும்.

இந்த வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவையில்லை. கணக்கு தொடங்க ஆதார் எண், செல்போன் எண் ஆகியவை மட்டும் போதுமானது. கணக்கு தொடங்க அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் தங்கள் பகுதி தபால்காரரை அணுகலாம்.

4 சதவீத வட்டி

இந்தியா முழுவதும் எந்த ஒரு தபால் நிலையத்திலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதில் இருந்து இணையதளம் மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியும். மத்திய, மாநில அரசு ஓய்வூதியங்கள், சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்டவையும் இந்த வங்கி கணக்கு மூலம் பெற முடியும்.

இந்த தபால் நிலையங்களில் நேரடியாகவும், வீடுகளுக்கு வரும் தபால்காரரிடமும் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இருப்பு தொகைக்கு ஏற்ப தினசரி 4 சதவீத வட்டி கணக்கீடு செய்யப்பட்டு காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். இதே போல் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

நெல்லையில் விழா

இதற்கான விழா நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று மாலை நடக்கிறது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தி பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா, தபால் வங்கி முதுநிலை மேலாளர் விஜய், மக்கள் தொடர்பு அலுவலர் சபாபதி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்