கல்லிடைக்குறிச்சி அருகே பயங்கரம் தேயிலை தோட்ட தொழிலாளி வெட்டிக் கொலை போலீசார் விசாரணை

கல்லிடைக்குறிச்சி அருகே, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-08-31 21:00 GMT
அம்பை, 

கல்லிடைக்குறிச்சி அருகே, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டோர் உதவியாளர் கொலை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 50). இவர் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் ஸ்டோர் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை இவர் வழக்கம் போல வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் மாஞ்சோலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பூபாலன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். யாரோ மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பூபாலன் ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் தேயிலை தோட்ட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்