ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் சிக்கியது

ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் சிக்கியது. இடைத்தரர்கள் 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

Update: 2018-08-31 23:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் புதிய வாகனங்களை பதிவு செய்யவும், பெர்மிட், ஓட்டுனர் உரிமம் போன்றவை வழங்கவும் ஊட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. கூடலூரில் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகமும் இயங்கி வருகிறது. மேலும் தொரப்பள்ளி, தலைகுந்தாவில் போக்குவரத்துத் துறையின் வாகன சோதனைச்சாவடிகள் உள்ளன. சமீபத்தில் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அருகே ஒரு தனியார் நிதி நிறுவன ஒப்பந்ததாரரிடம் இருந்து 60 வாகன பதிவு புத்தகங்கள் திருட்டு போனதாக ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

அதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புதிதாக தற்காலிக ஓட்டுனர் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் பெற வருகிறவர்களிடம் இடைத்தரகர்கள் ‘தாங்கள் அதிகாரிகளிடம் பேசி உரிமங்களை வாங்கி தருகிறோம்‘ என்று கூறி அதிகமான கட்டணம் வசூலிப்பதாக பல புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் கோவை போக்குவரத்து துணை ஆணையருக்கு வந்தன. ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் பெர்மிட் பெற்றுக்கொடுப்பதில் இடைத்தரகர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் நேற்று மாலை 5.15 மணியளவில் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் தனியார் காரில் திடீரென வந்து இறங்கினர். உடனடியாக அலுவலக நுழைவுவாயில் கேட் மூடப்பட்டது. பின்னர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி மற்றும் போலீசார் மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, வட்டார போக்குவரத்து அதிகாரி அறை மற்றும் மேல்தளத்தில் உள்ள வாகன பதிவு பிரிவு, ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு, பெர்மிட் வழங்கும் பிரிவில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்கள் சஞ்சய், ஜக்கரியா, பாபு, பிரகாஷ், ரவி, சேகரன், குமார் ஆகிய 7 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அந்த 7 பேரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 950 கைப்பற்றப்பட்டது. இந்த பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது, அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கோவையில் இருந்து வந்த சிறப்பு பிரிவு அதிகாரி தேவிபாலா முன்னிலையில் விசாரணை நடந்தது. இடைத்தரர்களிடம் இருந்தும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்தும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

அலுவலகத்தில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சத்திகுமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. மாலை 5.15 மணிக்கு தொடங்கிய சோதனை இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது. நுழைவுவாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற வந்த இளைஞர்கள், பெர்மிட் வாங்க வந்த லாரி உரிமையாளர்களும் தங்களது ஆவணங்கள் கிடைக்காமல் வெளியே காத்து நின்றனர்.

மேலும் செய்திகள்