கோபி அருகே கலர் ஜெராக்ஸ் எடுத்து 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

கோபி அருகே கலர் ஜெராக்ஸ் எடுத்து 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எந்திரம், மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-09-01 00:00 GMT

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பங்களாப்புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் 3 பேர் சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஓட்டல் ஊழியர் ரூ.190–க்கான பில்லை அவர்களிடம் கொடுத்தார். அந்த பில்லை வாங்கிக்கொண்டு 3 பேரும் கல்லாவில் இருந்த ஓட்டல் உரிமையாளரிடம் சென்றார்கள். அதில் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட ஓட்டலின் உரிமையாளருக்கு அந்த நோட்டை பார்த்ததும் கள்ளநோட்டாக இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அவர், ‘சில்லரை இல்லை. வேறு நோட்டு கொடுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள் தாங்களிடம் வேறு நோட்டு இல்லை என்று கூறினார்கள். பின்னர் திடீரென அங்கிருந்து ஓடினார்கள். இதனால் அவர், அவர்களை ‘‘பிடியுங்கள், பிடியுங்கள்’’ என்று சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் விரட்டி சென்று பிடித்தனர்.

பின்னர் 3 பேரையும், நடந்த விவரத்தை கூறி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் திருப்பூர் சக்தி நகரை சேர்ந்த சதீஷ் (வயது 32), பெருமாநல்லூர் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (31), புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (33) என்பது தெரிய வந்தது.

நண்பர்களான 3 பேரும் திருப்பூரில் உள்ள பிரிண்டிங் பட்டறையில் வேலை பார்த்துள்ளனர். அதன்பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டி.என்.பாளையம் வந்தனர். தாங்கள் வேலைக்கு செல்வதாக கூறி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை 3 பேரும் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

வீட்டில் வைத்து 100 ரூபாய் நோட்டுகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கடந்த 2 நாட்களாக புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் பங்களாப்புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கலர் ஜெராக்ஸ் எடுத்த 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்றபோது 3 பேரும் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜெராக்ஸ் எந்திரம், மடிக்கணினி, பிரிண்டர், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 58, 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 31 என மொத்தம் 67 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வேறு எங்கெல்லாம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர், இவர்களுடன் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபி அருகே கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்