கடலூரில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி

கடலூரில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-08-30 23:51 GMT
கடலூர்,

மத்திய அரசின் கள விளம்பர பிரிவு மற்றும் கடலூர் பெருநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது. இதற்கு கடலூர் பெருநகராட்சி செயற்பொறியாளர் ராமசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) மணிமாறன் முன்னிலை வகித்தார். கள விழிப்புணர்வு அலுவலக உதவி இயக்குனர் சிவகுமார் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விளம்பர பதாகைகளை கையில் பிடித்து இருந்தனர். கடலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி பீச்ரோடு, மஞ்சக்குப்பம் மைதானம், பழைய கலெக்டர் அலுவலக சாலை, பாரதிசாலை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அன்பழகி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், மாவட்ட தொற்றுநோய் அலுவலர் மோகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக தூய்மை இந்தியா திட்டம் குறித்து நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

எந்த ஒரு திட்டமும் முழுமையாக வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நமது நகரத்தை அழகாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இந்த திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கான விழிப்புணர்வு பணிகளில் மாணவர்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.

ஒவ்வொரு மாணவரும் தங்களின் பெற்றோரிடம் தூய்மையின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். வீட்டில் தொடங்கும் தூய்மை நாட்டின் தூய்மையில் முடிய வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மாணவர்கள் சுகாதார தூதுவர்களாக செயல்பட்டால்தான் நகரம் தூய்மையானதாகவும், நகர மக்கள் ஆரோக்கியமானவர்களாகவும் இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்