களக்காட்டில் வைரம் கடத்த முயன்ற வழக்கில் 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
களக்காட்டில் வைரம் கடத்த முயன்ற வழக்கில், 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
களக்காடு,
களக்காட்டில் வைரம் கடத்த முயன்ற வழக்கில், 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
வைரம் கடத்த முயற்சிகன்னியாகுமரி மாவட்டம் பத்துகானியை சேர்ந்த சசி, பிரசாந்த், சந்திரன், சுகுமாரன், ஆருகானியை சேர்ந்த விஸ்வநாதன், கேரள மாநிலம் நெடுமாங்காட்டை சேர்ந்த சுரேந்திரன் (வயது 71), கட்டக்காட்டை சேர்ந்த விஜயன் ஆகிய 7 பேர் நெல்லை மாவட்டம் களக்காடு வனச்சரகம் பத்மநேரி பீட், சேம்பத்து பகுதியில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு வைரக்கற்களை வெட்டி எடுத்து கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் வனத்துறையினர் மீது வெடிகுண்டுகளை வீசினர். உடனே வனத்துறையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.
18 ஆண்டுகளாக தலைமறைவுஇதில் சசி படுகாயம் அடைந்தார். உடனே வனத்துறையினர் சசி மற்றும் சுரேந்திரனை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த வெடி மருந்துகள் மற்றும் ஒயர்களை பறிமுதல் செய்து, களக்காடு போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் சுரேந்திரன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சுரேந்திரன் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். உடனே அவரை கைது செய்ய நாங்குநேரி மாஜிஸ்திரேட்டு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து களக்காடு போலீசார் தலைமறைவாக இருந்த சுரேந்திரனை நேற்று கைது செய்தனர்.