‘ஒவ்வொருவருக்கும் தந்தை கதாநாயகன், தாய் கதாநாயகி’ நடிகர் விவேக் பேச்சு

ஒவ்வொருவருக்கும் தந்தை கதாநாயகன்,தாய் கதாநாயகி என்று செந்தாமரை கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நடிகர் விவேக் பேசினார்.

Update: 2018-08-30 23:33 GMT
உசிலம்பட்டி,

மதுரை அருகே உள்ள வடபழஞ்சியில் உள்ள செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான வி.ஆர்.எஸ். கோப்பை மூன்றாம் ஆண்டு கபடி போட்டி தொடக்கவிழா, நாட்டு நலப்பணித்திட்ட மற்றும் இளஞ்செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்தும் மரக்கன்றுகள் நடும் விழா,மனிதவள மேலாளர்கள் கருத்தரங்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

2 நாட்கள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கபடி போட்டி தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் செந்தூர்பாண்டி தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கபடி கழகத் தலைவர் அகஸ்டின் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக உடற்கல்வித்துறை இயக்குனர் ஜெயவீரபாண்டியன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 33-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.

மனிதவள மேலாளர்கள் கருத்தரங்க விழாவில் கோவை ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன், டி.வி.எஸ். ஐயங்கார் நிறுவன மனிதவள மேலாளர் விஜிலா ஜாஸ்மின், தானம் அறக்கட்டளையை சேர்ந்த வெங்கடேசன், ஐ.டி. பிளக்ஸ் நிறுவன மனிதவள மேலாளர் பரூக் கான், சி.எல்.குளோபல் டெக் நிறுவனத்தைச் சேர்ந்த ரமணி ஆகியோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் குறித்தும் தகுதிகள் குறித்தும் விரிவாக விளக்கி பேசினர்.

அதன் பின்னர் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் நடிகர் விவேக் கலந்துகொண்டு வடபழஞ்சி, தென்பழஞ்சி மற்றும் மீனாட்சிபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டார். அதன் பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினார். விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:- விருந்தோம்பலில் சிறந்தவர்கள் மதுரை மக்கள்,இன்றைய இளைய சமுதாயம் சினிமாவில் வரும் கதாநாயகர்கள்,கதாநாயகிகளை முன்மாதிரியாக வைத்து செயல்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியான கதாநாயகன் நம்மை வழிநடத்திச் செல்லும் அவரவர் தந்தை தான். அதேபோல் முன்மாதிரியான கதாநாயகி பிரசவ வலிதாங்கி, வாழ்நாள் முழுவதும் தன்னலம் மறந்து நம்முடைய நலனை மட்டும் மனதில் வைத்து நம்மை பேணிகாக்கும் தாய்தான்.

நெஞ்சில் துணிவுடன் தவறினை தட்டிக் கேட்கும் தன்மை இளைஞர்களிடத்தில் இருக்க வேண்டும். இளைஞர்கள் தோல்வியைக் கண்டு எப்பொழுதுமே துவண்டு விடக்கூடாது தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களால் உங்கள் லட்சியத்தை அடையமுடியும்.வெற்றி உங்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் தோல்வி. உங்களை உங்களுக்கு அடையாளப்படுத்தும். எதிர்ப்பும், ஏளனமும் ஏற்றுக்கொள்ளும் திறனும் நம்மை வெற்றியடையச் செய்யும். இவ்வாறு அவர் பேசினார். கபடி போட்டியில் மானாமதுரை ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளி அணி முதல் பரிசும் ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி அணி 2-வது பரிசும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நடிகர் விவேக் பரிசுகள் வழங்கினார். விழாவில் கல்லூரி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், இளங்கோவன் ஆகியோர் விவேக்கிற்கு நினைவு பரிசுகள் வழங்கினர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் கவிக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் பார்வதி, கணேஷ்பாபு, செல்வலெட்சுமி, ஜெயதங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்