காவேரிப்பாக்கம் அருகே 8 குழந்தைகள் உள்பட 22 கொத்தடிமைகள் மீட்பு

காவேரிப்பாக்கம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 8 குழந்தைகள் உள்பட 22 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2018-08-30 23:45 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த ஈராளச்சேரி அருகே உள்ள பெரியகிராமம் பகுதியில் சிலர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக கலெக்டர் ராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன் தலைமையில், நெமிலி தாசில்தார் வேணுகோபால், மண்டல துணை தாசில்தார் ஜீவிதா, வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது அங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சக்கரமல்லூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த கதீர்பாஷா என்பவரிடம் கொத்தடிமைகளாக மரம் வெட்டும் வேலை செய்து வந்த காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு படாளம் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 45), அவரது மனைவி தேவி (31), சங்கரின் மாமியார் சாந்தி (50), வேலூர் மாவட்டம் பழையனூர் பகுதியை சேர்ந்த குமார் (50), அவரது மகன் தங்கராஜூ (20), மீனா (19), கலவை பகுதியை சேர்ந்த அண்ணாமலை (60), அவரது மனைவி லட்சுமி (40), சின்னப்பையன் (40), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த விநாயகர்பட்டு பகுதியை சேர்ந்த பார்த்திபன் (25), அவரது மனைவி சுகன்யா (22), வெம்பாக்கத்தை அடுத்த திருப்பணம்பூர் பகுதியை சேர்ந்த மணி (36), இவரது மனைவி எட்டியம்மாள் (26), மழையூர் அருகே உள்ள பந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை (60) உள்பட 22 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் குழந்தைகள் ஆவர்.

மீட்கப்பட்ட அனைவரும் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் அனைவரும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு விடுதலை சான்றும், அரசாங்க உதவி தொகையும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்