சட்டத்துக்கு புறம்பாக தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கமாட்டோம் அமைச்சர் கந்தசாமி உறுதி

புதுவையில் சட்டத்துக்கு புறம்பாக தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கமாட்டோம் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2018-08-30 23:09 GMT
புதுச்சேரி,

புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் காந்திநகரில் உள்ள கருத்தரங்க அறையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு செயலாளர் சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். ஆணையர் வல்லவன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

புதுவையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எந்த மாதிரி திறமையுள்ள இளைஞர்கள் வேண்டும் என்று தெரிவித்தால் அதற்கு ஏற்ப இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தொழிற்சாலைகள் தகுதியின் அடிப்படையில் புதுவை இளைஞர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தால்தான் குற்றங்கள் குறையும். தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளையும் சிலர் உற்பத்தி செய்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சாலைகள் செயல்பட வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கமாட்டோம். அரசாங்கத்தை பொறுத்தவரை தொழிற்சாலைகளை நசுக்கும் எண்ணம் கிடையாது. உரிமம் பெறாத தொழிற்சாலைகள் இன்னும் 2 மாதங்களுக்குள் உரிமத்தை பெறவேண்டும். தொழிற்சாலைகளில் மின்சரம், தண்ணீர் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படுகிறதா? தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

வெளிமாநில தொழிலாளர்களை குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வைப்பது முறைப்படுத்தப்படும். சட்டத்துக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் புதுவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

மேலும் செய்திகள்