திருமணமான சில மணி நேரத்தில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது போலீஸ் விசாரணை

17 வயது சிறுமிக்கு திருமணமான சில மணி நேரத்தில் குழந்தை பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-30 22:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக் கும் கோவிந்தபாடியில் உள்ள நாகேஸ்வரி அம்மன் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி நேற்றுமுன்தினம் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை வீட்டினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புதுப்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்தார்.

இதனால் திடுக்கிட்ட உறவினர்கள், புதுப்பெண்ணை கொளத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர்.

அங்கு டாக்டர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவள் கர்ப்பமாக இருப்பதாகவும், சில மணி நேரத்தில் குழந்தை பிறக்கும், என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் சேர்த்தனர். அங்கு அன்று இரவு 9.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்ததும் புதுமாப்பிள்ளை வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணமான அன்றே புதுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்