திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை அமைக்க வேண்டும்: கலெக்டர் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.

Update: 2018-08-30 23:30 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா-விஜர்சன ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:-

விநாயகர் சிலை அமைப்பாளர்கள், சிலைகள் நிறுவ சம்பந்தப்பட்ட சப்-கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.க்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் ஆகியோரிடம் உரிய தடையின்மை சான்று பெற்று விநாயகர் சிலைகளை அமைக்க வேண்டும். மேலும் அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்பினரால் நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் 15 நபர்கள் கொண்ட பாதுகாப்பு குழுக்களை அமைத்து, அவர்களில் குறைந்தபட்சம் 5 பிரதிநிதிகளை ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் சிலை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அவர்களே 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

அந்த பொறுப்பாளர்கள் தங்கள் பெயர் கொண்ட பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். அவர்களது பட்டியலை முன்கூட்டியே அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். சிலை பொறுப்பாளர்கள் பெயர்கள் மற்றும் அவர்களது பணி நேரம் ஆகியவை குறித்த விவரங்கள் சிலைக்கு அருகில் அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும். பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடத்துடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்க கூடாது. சிலைகள் சுற்றுச் சூழலை பாதிக்காத சுடப்பட்ட களிமண்ணால் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். சிலைகளுக்கு நீர்நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வண்ணங்கள் மட்டுமே பூசப்பட வேண்டும். ரசாயன வண்ண பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகள் பயன்படுத்தக்கூடாது. சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், போலீசாரால் அனுமதியளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஊர்வலத்தில் பட்டாசுகளை பயன்படுத்த கூடாது. ஊர்வலத்தின் போது போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எந்த காரணத்தை கொண்டும் ஊர்வலம் நிறுத்தப்படக்கூடாது. ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை புண்படுத்தும்படி கோஷமிடக்கூடாது. மேலும், பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு இல்லாத வகையில் ஊர்வலம் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது எந்த ஆயுதங்களையும் கொண்டு செல்லக்கூடாது. மது அருந்தியவர்களை ஊர்வலத்தில் அனுமதிக்க கூடாது. ஊர்வலத்தின் போது எந்த அசம்பாவிதமான சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க, அமைதியாக ஊர்வலம் நடத்தி முடிக்கவும், ஊர்வலத்தை நடத்துகிற பொறுப்பாளர்கள் முழு பொறுப்பினை ஏற்க வேண்டும்.

நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ.க்கள், போலீசார் வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் விஜர்சனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், போலீசார், தீயணைப்புதுறையினர், தாசில்தார்கள் மற்றும் இந்து முன்னணியின் மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேஸ்வரன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், இந்து அமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்