நெல்லை கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை: உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை முதுமலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் யானையை முதுமலைக்கு கொண்டு சென்று பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நெல்லை,
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் யானையை முதுமலைக்கு கொண்டு சென்று பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
யானைக்கு சிகிச்சைநெல்லை மாவட்டம் பொட்டல்புதூரை சேர்ந்தவர் அசன் மைதீன். இவருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி (வயது 68) கண் பார்வையை இழந்ததுடன், பற்களும் விழுந்து விட்டதால் தென்னை ஓலை மற்றும் இலை, தழைகளை சாப்பிட முடியாமல் அவதிப்பட்டது. மேலும் கால் நகங்கள் மற்றும் உடலில் அரிப்பு ஏற்பட்டதால் பெரும்பாலான நேரம் தும்பிக்கையால் மண்ணை வாரி உடல் முழுவதும் தூற்றிக்கொண்டே இருந்தது.
இதையடுத்து அசன் மைதீன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில் உள்ள கால் நடை ஆஸ்பத்திரிக்கு யானையை அழைத்து வந்தார். அங்கு கட்டி போட்டு விட்டு நல்லமுறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து கால்நடைத்துறை டாக்டர்கள் குழுவினர் இந்த யானைக்கு சிறப்பு கவனம் செலுத்தி மருத்துவ சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் யானைக்கு பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதால் தன்னால் பராமரிக்க முடியவில்லை என்று அசன் மைதீன் கூறிவந்துள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதால் இந்த யானைக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். இந்த நிலையில் யானையை முதுமலையில் உள்ள யானைகள் சரணாலயம் பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள யானைகளுடன் வைத்து பராமரித்தால் விரைவில் குணமாகிவிடும் என்றும், அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வனத்துறை அதிகாரி ஆய்வுஇதையடுத்து நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி திருமால் மற்றும் டாக்டர்கள் குழுவினர் நேற்று யானையை பார்வையிட்டனர்.
பின்னர் மாவட்ட வனத்துறை அதிகாரி கூறுகையில், ‘‘யானைக்கு தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் யானை உடல் நலம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக யானை நலக்குழு சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் யானையை முதுமலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டால், உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய அனுமதி பெறப்படும் கொண்டு செல்லப்படும்’’ என்றார்.