சங்கரன்கோவில் அருகே 2–வது நாளாக மலையில் குடியேறிய கிராம மக்கள் வீடு திரும்பினர் போராட்டம் வாபஸ்

சங்கரன்கோவில் அருகே 2–வது நாளாக மலையில் குடியேறிய கிராம மக்கள் குவாரிகள் இயங்காது என தாசில்தார் உறுதி அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்று வீடு திரும்பினர்.

Update: 2018-08-30 22:00 GMT

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே 2–வது நாளாக மலையில் குடியேறிய கிராம மக்கள் குவாரிகள் இயங்காது என தாசில்தார் உறுதி அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்று வீடு திரும்பினர்.

கல்குவாரிக்கு எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாடிக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஆனையூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 120–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகள் மற்றும் தார் ஆலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கல்குவாரிகளில் வெடி வைப்பதால் வீடுகளில் அதிர்வுகளும், ஆடு, மாடுகளுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறி வந்தனர்.

இதற்கிடையே ஒரு தனியார் கல்குவாரி கடந்த 2014–ம் ஆண்டு முதல் செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த கல்குவாரி மீண்டும் இயங்குவதற்கு, மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த 10–ந் தேதி அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டமும் நடத்தினர்.

மலையில் குடியேறி போராட்டம்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் அந்த கல்குவாரி செயல்பட தொடங்கியது. இதனைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள், ஊர் அருகே உள்ள மலையில் ஏறி குடியேறும் போராட்டம் நடத்தினர். பள்ளி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், நேற்றுமுன்தினம் காலை தொடங்கிய இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டத்தையொட்டி இரவு நேர சாப்பாடு தயாரிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அங்கேயே சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர்.

வீடு திரும்பினர்

இதற்கிடையே நேற்று 2–வது நாளாக பொதுமக்களின் போராட்டம் நீடித்தது. பின்னர் மதியம் சங்கரன்கோவில் தாசில்தார் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கல்குவாரிகளை மூடும்வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். தாசில்தார் இந்த கல்குவாரிகள் இயங்காது என கைப்பட எழுதி அந்த கடிதத்தை எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்று கூறினார். உடனே தாசில்தார் இனி இந்த கல்குவாரிகள் இயங்காது, அப்படி இயங்கினால் கல்குவாரிகளில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கைப்பட எழுதிய கடிதத்தை பொதுமக்களிடம் வழங்கினார். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்