மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2018-08-30 23:00 GMT
மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்து சேர்ந்தது. அங்கிருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 23-ந்தேதி அணை நிரம்பியது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணை நீர்மட்டம் குறைந்தது. அதன்பின்னர் நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததால் கடந்த 11-ந்தேதி மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அதன்பிறகு நீர்மட்டம் குறைந்தது. தொடர்ந்து 21-ந்தேதி 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

இதன்பின்னர் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 6 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 119.82 அடியாக இருந்தது. நேற்று காலையிலும் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

நேற்று மாலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 119.83 அடியாக இருந்தது.

மேலும் செய்திகள்