சத்தியத்தை மீறி தந்தை மது குடித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

தர்மபுரி அருகே சத்தியத்தை மீறி தந்தை மது குடித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-08-30 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள மாரவாடி ஜோதி நகரை சேர்ந்தவர் முருகன். லாரி டிரைவர். இவருடைய மகள் கனிமொழி (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனை மகள் கனிமொழி அடிக்கடி கண்டித்ததால் முருகன் கடந்த சில நாட்களுக்கு முன் மது குடிப்பதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது.

இனிமேல் மது குடிக்க மாட்டேன் என்றும், மகளுக்கு அவர் சத்தியம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் முருகன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

சத்தியத்தை மீறி தந்தை மது குடித்ததை கனிமொழி தட்டி கேட்டுள்ளார். அப்போது தந்தை, மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கனிமொழி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மது குடித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்