உடன்குடி பகுதியில் தாங்கை, தருவை குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

உடன்குடி பகுதியில் தாங்கை, தருவை குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2018-08-30 21:30 GMT

உடன்குடி, 

உடன்குடி பகுதியில் தாங்கை, தருவை குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தாங்கை, தருவை குளங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் உடன்குடியும் ஒன்றாகும். கருப்புக்கட்டிக்கு பெயர் பெற்ற உடன்குடி நகரமானது, ஒரு காலத்தில் வெற்றிலை கொடிக்காலுக்கும் பெயர் பெற்றது. நாளடைவில் வறட்சி மிகுந்ததால், நிலத்தடியில் கடல்நீர் உட்புகுந்ததால் வெற்றிலை விவசாயம் அழிந்தது. இதனால் உடன்குடி சுற்றுவட்டார பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை, தென்னை போன்றவற்றையே பயிரிடுகின்றனர்.

உடன்குடி சுற்றுவட்டார பகுதியில் சடையநேரி குளம், தாங்கைகுளம், கல்லாமரிகுளம், குலசேகரன்பட்டினம் தருவைகுளம் போன்றவை பிரதான குளங்கள் ஆகும். மருதூர் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் சடையநேரி குளம் நிரம்பி, மறுகால் பாய்ந்தால்தான் தாங்கைகுளம், குலசேகரன்பட்டினம் தருவைகுளம் ஆகியவற்றுக்கு அடுத்தடுத்து தண்ணீர் செல்லும்.

விவசாயத்தை கைவிட்டு...

இதேபோன்று மணிமுத்தாறு 3–வது, 4–வது ரீச்சில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு மூலக்கரைப்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, கருமேனியாற்றுக்கு தண்ணீர் வந்தால்தான் கல்லாமரிகுளம் நிரம்பும்.

இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உடன்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் போதிய நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு, வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர்.

நடவடிக்கை

மெஞ்ஞானபுரம் அருகே ஆணையூர் வரையிலுமே சடையநேரி கால்வாய் தோண்டப்பட்டு உள்ளது. பின்னர் அங்கிருந்து சடையநேரி குளம் வரையிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் இல்லாததால், மேடான விவசாய நிலங்களின் வழியாக வரும் தண்ணீரின் அளவு குறைந்து விடுகிறது.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக சடையநேரி குளம் நிரம்பாததால், உடன்குடி பகுதிகளில் உள்ள மற்ற குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. எனவே உடன்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்