கடம்பாகுடி கிராமத்தில் புதிய கலையரங்கம் கருணாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
கடம்பாகுடி கிராமத்தில் ரூ.6½ லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கத்தை கருணாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தொண்டி,
திருவாடானை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உலகம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கலையரங்கம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் மற்றும் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கடம்பாகுடி கணேசன் ஆகியோர் கருணாஸ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து இந்த கோரிக்கையை ஏற்று கருணாஸ் எம்.எல்.ஏ. தனது சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடம்பாகுடி கிராமத்தில் கலையரங்கம் கட்ட ரூ.6½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அங்கு புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டது.
இதன் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் தலைமை தாங்கினார். கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கருணாஸ் எம்.எல்.ஏ.விற்கு கிராம மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.