ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற உதவி செய்வோம்
ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் கூறினார்.
கோவை,
நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் விவசாயிகள் அமைப்பு சார்பில் கலந்துரையாடல் கூட்டம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சிறுதுளி அமைப்பு, விவசாயிகள் சங்கத்தினர், குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினர்களின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாரதீய ஜனதாகட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
மத்திய நீர்வளத்துறை இணைமந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் பல்வேறு அமைப்பினரிடம் மனுக்களையும் பெற்றார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்தியா முழுவதிலும் உள்ள நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. கங்கை, யமுனை ஆறுகளில் மாசு கலக்காமல் தடுக்கவும், தண்ணீரை சுத்தப்படுத்தவும் பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஒவ்வொரு ஊரிலும் உள்ளாட்சி அமைப்புகள் தனியார் நிறுவனங்கள், பொதுநல அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நீர்நிலைகளை பாதுகாப்பதிலும், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதுடன், மீண்டும் கலக்காமலும் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கோவை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி நகரை சுற்றி உள்ள குளம், குட்டைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளை பாதுகாக்க உதவ வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் ஆழத்துக்கு செல்லாமல் தடுக்கவும் ‘அடல் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் நிதி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்படும்.
மத்திய அரசின் திட்டத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரை மேம்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரத்துக்கு பயன் அளிக்கும் வகையிலான ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்துக்கான ஒப்பந்தம் 1967-ம் ஆண்டு கேரளா-தமிழ்நாடு இடையே செய்யப்பட்டும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை இங்கு வந்த பின்னர்தான் தெரிந்துகொண்டேன்.
இருமாநிலங்களுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிபடையிலான இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தேவையான உதவிகளை அளிக்கும். இருமாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினை என்பது கணவன்-மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினை போன்றது. இதனை குடும்பநல கோர்ட்டுகள் தீர்த்து வைப்பதுபோல், மத்திய அரசு இருமாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.சேகர், ஜி.கே.நாகராஜ், சிறுதுளி அமைப்பு நிர்வாகி வனிதா மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.