மஞ்சூர்- கோவை சாலை விரிவாக்க பணி தொடங்குவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மஞ்சூர்- கோவை சாலை விரிவாக்க பணி எப்போது தொடங்கும்? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2018-08-30 22:45 GMT
மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்ல குன்னூர்- காட்டேரி வழியாகவும், கோத்தகிரி வழியாகவும், மஞ்சூர்- கெத்தை வழியாகவும் 3 வழித்தடங்கள் இருக்கின்றன. நீலகிரியில் பருவமழை காலங்களில் குன்னூரில் இருந்து காட்டேரி வழியாக கோவைக்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் விடுகின்றன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. அந்த நேரங்களில் கோத்தகிரி வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. கோத்தகிரி- கோவை சாலையில் மரங்கள் விழுந்து துண்டிக்கப்பட்டால், குன்னூர்- காட்டேரி வழியாக வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இதனால் குன்னூர்- காட்டேரி வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே பலத்த மழை பெய்யும்போது குன்னூர்- காட்டேரி வழியிலும், கோத்தகிரி வழியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால், 3-வது மாற்றுப்பாதையான மஞ்சூர்- கெத்தை வழியாக கோவைக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வந்தன.

மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பயனடைகின்றனர். ஆனால் அந்த சாலை மிகவும் குறுகலாகவும், 30-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளதால் எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிட வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்லும் 3-ம் மாற்றுப்பாதையாக மஞ்சூர்- கோவை சாலையை சீரமைக்க தமிழக அரசு ரூ.180 கோடி நிதி ஒதுக்கியது. மேலும் அந்த சாலையில் குறிப்பிட்ட இடங்கள் வனப்பகுதிக்கு உட்பட்டது என்பதால், மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை நாடியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதற்கான அனுமதி கிடைத்துவிட்டது.

இதையடுத்து மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வரை 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையை 3½ மீட்டர் அகலத்தில் இருந்து 7½ மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தவும், அதில் ஒருபுறத்தில் 2 மீட்டர் அகலத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த சாலையை விரிவுபடுத்துவதன் மூலம் கோவைக்கு 2½ மணி நேரத்தில் செல்ல முடியும். இதனால் மழை காலங்களில் மஞ்சூர் பகுதி வியாபாரிகள், தனியார் வாகன உரிமையாளர்கள் பயனடைவதோடு, நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரமும் பாதிக்கப் படாமல் இருக்கும்.

தற்போது சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியும் காணப்படுவதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. மேலும் சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து, முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

நீலகிரியில் இருந்து கோவைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதையாக இருப்பது மஞ்சூர் சாலை தான். இந்த சாலையை விரிவுபடுத்த தமிழக அரசு ரூ.180 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

சாலையின் இருபுறங்களிலும் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுவதால், வாகனங்களில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிக்கும்போது கிளைகள் முகத்தில் காயப்படுத்தும் நிலை உள்ளது. எனவே மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவைக்கு செல்லும் அந்த சாலையை விரிவுபடுத்தும் பணியை உடனே அதிகாரிகள் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்