கூடலூரில் தொடரும் மழையால் நிரம்பி வழியும் தடுப்பணைகள்

கூடலூரில் தொடரும் மழையால் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் குடிநீர் திட்ட குழாய்களில் அடைப்புகளை நீக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2018-08-30 22:15 GMT
கூடலூர்,

கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் ஹெலன், பல்மாடி மற்றும் பாண்டியாறு, தொரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகித்து வருகிறது.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. மேலும் சேறு, சகதி மற்றும் கற்களும் அடித்து வரப்படுவதால் தடுப்பணைகளில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் திட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கூடலூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் நகராட்சி குடிநீர் வினியோக பணியாளர்கள் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க பல கட்டங்களாக முயற்சி செய்து வந்தனர். ஆனால் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தடுப்பணைகளுக்கு செல்ல முடியவில்லை. இதனால் கூடலூர் அருகில் பயன்படுத்தாமல் இருந்த பழைய தடுப்பணைகளில் பிளாஸ்டிக் குழாய்களை பொருத்தி தற்காலிகமாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகித்தனர். ஆனால் அவை போதுமானதாக இல்லை. இதனால் குடிநீர் வினியோக பிரச்சினை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஓவேலி, ஆத்தூர், பல்மாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் தடுப்பணைகளில் இருந்து வனப்பகுதி வழியாக பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எந்ததெந்த இடங்களில் அடைப்புகள் உள்ளது என்பதை உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள குழாய்களை கழற்றி பரிசோதித்து வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பார்வதி கூறியதாவது:- தடுப்பணைகளில் இருந்து வரும் குழாய்களில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சி பணியாளர்கள் அடர்ந்த வனப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை ஆய்வு செய்து அடைப்புகளை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே கூடலூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை உள்ளது. இன்னும் சில நாட்களில் அடைப்புகள் நீக்கப்பட்டு, பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்