ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

Update: 2018-08-30 21:45 GMT
ஊட்டி,

ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் படிக்கிறார்கள். அங்கு காலை மற்றும் மாலை வகுப்புகள் நடக்கின்றன. பல்வேறு துறை பேராசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.

தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் உள்ள அபாயகரமான மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. ஊட்டி-குன்னூர் சாலை தலையாட்டுமந்து பகுதியில் அபாயகரமான நிலையில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. ஊட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வருவாய்த்துறையினர் 30 அபாயகரமான மரங்களை கணக்கெடுத்து, அதனை வெட்ட எண் குறிப்பிட்டனர். இதையடுத்து அந்த மரங்களை வெட்டி அகற்ற வருவாய்த்துறை அனுமதி அளித்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டியில் பெய்த மழை காரணமாக கல்லூரி வளாகத்தில் இருந்த ஒரு மரம் திடீரென முறிந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் நின்ற கல்லூரி மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த மரத்துக்கு அடியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அபாயகரமான மரங்களை வெட்டும் பணி தொடங்கி உள்ளது. பொதுப்பணித்துறை கல்லூரி பிரிவு அதிகாரிகள் மரங்களை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். மிக உயரமாக உள்ள அபாயகரமான மரங்கள் மின்வாள் மூலம் அறுக்கப்பட்டும், கயிறு கொண்டு இழுத்தும் அகற்றப்பட்டு வருகிறது. உயரமான மரங்களின் கிளைகள் முதலில் வெட்டப்பட்டு, பின்னர் மரம் முழுவதும் வெட்டி அகற்றப்படுகிறது. இந்த பணி காரணமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறிய தாவது:- முதற்கட்டமாக கல்லூரி வளாகத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மரங்கள் படிப்படியாக வெட்டி முழுமையாக அகற்றப்படும். இதனால் கல்லூரிக்கு இன்றும்(நேற்று), நாளையும்(இன்று) விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்லூரி நாட்களில் மாணவ- மாணவிகள் ஆங்காங்கே நடந்து சென்று கொண்டு இருப்பதால், அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற முடியாது. எனவே கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்து அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களுக்கு மாற்றாக வேறு நாட்களில் கல்லூரி செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்