ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ஆயிரத்து 927 பேர் மீது வழக்குப்பதிவு

நீலகிரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ஆயிரத்து 927 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

Update: 2018-08-30 22:00 GMT
ஊட்டி,

தமிழகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கினார்கள். மேலும் ஹெல்மெட் கட்டாயம் அணிவது, சாலை பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஊட்டியில் போலீசார் இருசக்கர வாகன பேரணி நடத்தினார்கள்.

இதையடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி செல்கிறவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஊட்டி சேரிங்கிராஸ், ஹில்பங்க், லவ்டேல் சந்திப்பு, ஏ.டி.சி. பஸ் நிலையம், தலைகுந்தா, கூடலூர் பஸ் நிலையம், தொரப்பள்ளி, குன்னூர் பஸ் நிலையம், காட்டேரி, சிம்ஸ்பார்க் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பின்னால் இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் ஊட்டி நகரில் 1,025 பேர், ஊட்டி ஊரகப்பகுதியில் 227 பேர், குன்னூர் நகரில் 739 பேர், கூடலூரில் 522 பேர், தேவலா பகுதியில் 414 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 927 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவின்படி காவல்துறை சார்பில் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்ற விழிப்புணர்வு தகவல் பலகை ஊட்டியில் காபிஹவுஸ், ஏ.டி.சி. உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் ‘தலைக்கவசம் நம் தலையை காக்க மட்டுமல்ல, நம் தலைமுறையையும் காக்கவும் தான்‘ என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் பாதுகாப்பு கருதி கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். பின்னால் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இதுகுறித்து அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குவதுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாருக்கு உத்தர விடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்