5 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் பொன்.ராதாகிருஷ்ணன், நாளை தொடங்கி வைக்கிறார்

குமரி மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் நாளை (சனிக்கிழமை) தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.

Update: 2018-08-30 23:15 GMT
நாகர்கோவில்,

இந்திய அஞ்சல் துறை, வங்கித்துறையில் கால்பதிக்கும் விதமாக “இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் (இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி)“ என்ற பெயரில் அஞ்சல் வங்கி சேவை திட்டம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க விரும்புபவர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களை வரவழைத்து தங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்கை தொடங்கலாம். கணக்கை தொடங்கியவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தைப்பெற வங்கியை நாடிச்செல்ல வேண்டியதில்லை. தபால்காரர்களை வீட்டுக்கு அழைத்து அவர் மூலமாகவே பணமும் பெற்றுக் கொள்ளலாம்.

பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததும், நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரஇருக்கிறது. கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், நாகர்கோவில் டவுண் தபால் நிலையம், மருங்கூர் துணை தபால் நிலையம், இரவிபுதூர் மற்றும் குமாரபுரம் தோப்பூர் கிளை தபால் நிலையங்கள் என மொத்தம் 5 தபால் நிலையங்களில் இந்த அஞ்சல் வங்கி சேவை திட்டம் தொடங்கப்படுகிறது.

 இந்த திட்டத்தின் தொடக்க விழா நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் நாளை பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறுகிறது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தென்மண்டல அஞ்சல்துறை தலைவர் வெண்ணம் உபேந்தர், கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த புதிய வங்கி சேவை திட்டம் குறித்து கன்னியாகுமரி அஞ்சல்கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

“இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க்“ என்ற அஞ்சல்துறை வங்கி சேவை திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வருகிற 1–ந் தேதி தொடங்கி வைக்கிறார். குமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 5 தபால் நிலையங்களில் இந்த வங்கித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 267 தபால் நிலையங்கள் உள்ளன. அவை அனைத்திலும் 3 மாதத்துக்குள் இந்த வங்கி சேவைத்திட்டம் கொண்டுவரப்படும். குமரி மாவட்ட தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகளை பொறுத்தவரையில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 605 உள்ளன.

இந்த புதிய வங்கி சேவை திட்டத்தில் கணக்கு தொடங்க வைப்புத்தொகை, அறிமுக நபர் மற்றும் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. ஆதார் அட்டை, செல்போன் எண் மட்டும் இருந்தால் போதும். இந்த கணக்கு தொடங்குபவர்களுக்கு கணக்கு புத்தகம் கிடையாது. கணக்கு தொடங்கியதும் சம்பந்தப்பட்டவர்களுடைய செல்போன் எண்ணுக்கு கணக்கு எண் வந்துவிடும். மொபைல் ஆப் மூலம் புதிய வங்கி சேவை கணக்கு தொடங்க தபால்காரரை அழைத்தால் அவர் வீட்டுக்கே வந்து கணக்கு தொடங்க உதவி செய்வார். அதேபோல் பணம் போட வேண்டும் என்றாலும், பணம் எடுக்க வேண்டும் என்றாலும் மொபைல் ஆப் மூலமோ, இணையதளம் மூலமோ தகவல் தெரிவித்து விட்டால் தபால்காரர் வீடுதேடி வந்து பணம் கொடுத்தும், பணம் பெற்றும் செல்வார். அதற்கு சேவைக்கட்டணம் உண்டு.

நாள் ஒன்றுக்கு ஒருமுறை ரூ.5 ஆயிரம் வரை தபால்காரர் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு 2 முறை மட்டுமே பணம் பெறமுடியும். அதேபோல் நாள் ஒன்றுக்கு 2 முறை டெபாசிட் செய்து கொள்ளலாம். அதுவும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரைதான் அந்த கணக்கில் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்கும் பணம் சம்பந்தப்பட்டவர் அஞ்சல் சேமிப்பு கணக்கு இருந்தால் அதற்கு மாற்றம் செய்யப்படும். அல்லது அந்த நபரின் வேறு வங்கிக்கணக்குக்கு மாற்ற வேண்டும்.

இந்த கணக்கு தொடங்கியிருப்பவர்களுக்கு கியூ.ஆர். என்ற மின்னணு பணபரிமாற்றத்துக்கான அட்டை வழங்கப்படும். அதனை டெபிட் கார்டு போன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அட்டையை எந்த தபால் நிலையத்திலும் கொடுத்து பணம் பெறவும் முடியும்.

இவ்வாறு முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறினார்.

பேட்டியின்போது நாகர்கோவில் வங்கி கிளை மேலாளர் நவீன், நாகர்கோவில் முதுநிலை தபால் அதிகாரி சொர்ணம், உதவி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்