கண்ணீரில் கலந்த காவிரி
வெள்ள பாதிப்பு; முதல்-அமைச்சர் பார்வை என செய்திகள் ஒரு பக்கம்; கிணறுகள் வற்றி கிடக்கின்றன; ஏரியில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; குளங்கள் காய்ந்து கிடக்கின்றன என விவசாயிகளின் வேதனை மறுபக்கம்.;
‘தடுப்பணைகள் கட்ட முடியாது; ஏனெனில் அவை சமவெளிப் பகுதிகள்’ என்று சேலத்தில் சொன்னார் முதல்-அமைச்சர். தற்போது, ‘60-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்படும்’ என்று ஈரோட்டில் அறிவித்திருக்கிறார். எப்போது சமவெளிகள் பள்ளத்தாக்குகளாக மாறின என்பது புரியாத புதிர். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமும், கடலை அடைந்த காவிரிக்கு தடுப்பணையும் ஒன்றே.
‘இது கூட புதிய திட்டம் இல்லை. 117 கோடி ரூபாயில் 61 தடுப்பணைகள் கட்டப்போவதாக 2014-ம் ஆண்டே உயர் நீதிமன்றத்தில், இதே தமிழக அரசால் சொல்லப்பட்ட விஷயம் தான்’ என போட்டு உடைத்திருக்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடி ரூபாய் வருவாய் கொண்ட தமிழக அரசுக்கு, வெறும் 117 கோடி ரூபாய் ஒரு விஷயமா?
ஆண்டுக்கு 25 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தால் கூட 60 டி.எம்.சி. தண்ணீரையும், டெல்டா விவசாயிகளின் கண்ணீரையும் காப்பாற்றியிருக்க முடியுமே. இன்றைய தேதிக்கு அத்திட்டத்தின் மதிப்பீடு 300 கோடி ரூபாயை எட்டியிருக்கும். அந்த, ‘ஒதுக்கீடு’ எப்போது நடக்குமோ?
இந்த ஆண்டும் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையளவு, சராசரியை கடந்துவிட்டது. தமிழகத்துக்கு கர்நாடகா ஜூன், ஜூலையில் மட்டும் திறந்துவிட்டதே 147 டி.எம்.சி. தண்ணீர் அதன் பிறகு தான், சுனாமி போல, வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்ட கதையெல்லாம் நடந்தது.
கேரள பெருவெள்ளத்தின் புண்ணியத்தில், நம் எல்லையோர மாவட்டங்கள் மிதந்ததும் அறிந்ததே. பல் துலக்க தண்ணீர் இல்லாத இஸ்ரேல், இன்று நீர் மேலாண்மையில் உலக நாடுகளுக்கு உதாரணமாகத் திகழ்கிறது. தமிழகமோ ஊதாரி கையில் கிடைத்த பணத்தைப் போல ஒட்டுமொத்த தண்ணீரையும் வீணடித்து கிடக்கிறது.
தடுப்பணைகள் சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். அதேசமயம், தடுப்பணைகளுக்கு மாற்றாக வடிகால்வாய்கள் அமைத்திருக்க முடியாதா? தண்ணீரையே பார்த்திராத ராமநாதபுரம், விருதுநகர் வரை மழை நீரை மடைமாற்றி இருக்க முடியாதா?
தேசிய நதியை எல்லாம் இணைப்பது இருக்கட்டும்; மாநிலத்துக்கு உள்ளேயாவது நதிகளை இணைக்கக் கூடாதா? நல்லக்கண்ணு மற்றும் அப்பாவு தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்புகளை அமல்படுத்தக் கூடாதா?
கூழுக்கே வழியைக் காணோம்; பாயாசத்துக்கு எங்கே போவது என்ற கதையாக, காவிரியின் நிலை இந்த லட்சணத்தில் இருக்கும்போது, கோதாவரியைக் கொண்டு வருகிறார்கள் என்பதை எப்படித்தான் நம்புவதோ!
ஏரிகளையும் குளங்களையும் முறையாக தூர்வாரியிருந்தால், இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தால், ஏரிகள் குளங்கள் கண்மாய்கள் இடையே முறையான இணைப்புகள் இருந்திருந்தால், இந்தப் பக்கம் வெள்ளமும் வந்திருக்காது; அந்தப்பக்கம் வறட்சியும் நீடித்திருக்காது.
இந்தப் பிரச்சினைக்கு இடையில், கொள்ளிடம் பாலத்தின் 9 மதகுகள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. எப்போது? வினாடிக்கு, வெறும் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த போது. வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தபோது மதகு உடைந்திருந்தால்...? திருச்சி மாவட்டம், கேரளா ஆகியிருக்கும். கரையோர மக்களின் நிலை அதோகதி ஆகியிருக்கும்.
கொஞ்சம் கூட கலங்காத முதல்-அமைச்சர், இது 180 ஆண்டுக்கு முந்தைய பாலம்; உடைந்ததில் வியப்பென்ன என்பது போல் பேசுகிறார். அதானே! திறப்பு விழாவுக்கு முன்பே பிளந்துவிடும் பாலங்கள் கொண்ட நாட்டில், 180 ஆண்டு ஆன பிறகு கூட, ஒரு மதகு உடையக் கூடாதா? இது ஒரு குற்றமா?
ஒரு நாட்டின் மிக முக்கிய தேவை, தொலைநோக்கு கொண்ட தலைமை. இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்த வெள்ளையனுக்கு இருந்திருக்கிறது அந்தப் பார்வை. தற்போதைய தமிழக அரசுக்கு அத்தகைய பார்வை இல்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார் ஆறு முறை ஆட்சியைப் பிடித்த தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விமர்சனம் செய்வது கடமை; கடமைக்கு விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளின் கடமையல்ல. பாராட்டுவதாக இருந்தாலும் பழிபோடுவதாக இருந்தாலும், இரண்டு திராவிட இயக்கங்களின் ஐம்பதாண்டு கால ஆட்சியையும் சேர்த்தே தான் செய்ய வேண்டும். பரஸ்பரம் குறை சொன்னது போகட்டும்; இனிமேலாவது நீர் மேலாண்மையில் கவனம் செல்லட்டும்.
நிதி ஒதுக்கீடு தான் ஒரே தீர்வு என்பதை நான் வலியுறுத்தவில்லை. ஆண்டுதோறும் கூவத்தை சீரமைக்க ஒதுக்கப்படும் நிதியும், போடப்படும் திட்டமும் என்ன ஆகிறது? அடுத்த வெள்ளத்தை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறோமா என்ற கேள்விக்கு பதில் தேடினாலே, அந்த நிதி ஒதுக்கீடுகள் என்ன ஆனது என்பதற்கும் பதில் கிடைத்துவிடும்.
நல்வழி சொல்ல ஆயிரம் வல்லுனர்கள் இங்கு இருக்கிறார்கள்; அதிகாரம், ஒரு படி கீழே இறங்கி அவர்களை அரவணைத்து, விவசாயிகளை ஆலோசித்து, போர்க்கால அடிப்படையில் அணைகள் கட்ட வேண்டாம்; தடுப்பணைகளைக் கூட தள்ளி வைக்கலாம்; குறைந்தபட்சம், ஆக்கிரமிப்புகளையாவது அகற்றுங்கள். கடைமடைக்கு தண்ணீர் வரட்டும்.
ஏனெனில், இத்தனை வெள்ளத்துக்குப் பிறகும், விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டார்கள் எனச் செய்தி வந்தால், அத்தனை பேருக்கும் அவமானம்!
-அழகிய சிங்கன்