11-ந்தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலம் தமிழக கவர்னர் தொடங்கி வைக்கிறார்
சென்னையில் வருகிற 11-ந்தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடக்கிறது. இதனை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் சேவைக்காக, ஆண்டு தோறும் தமிழக மக்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாக சென்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் சமர்ப்பிக்கப்படும். இதில் 2 திருக்குடைகள் திருச்சானூர் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படும். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சமர்ப்பிக்கும் இந்த திருக்குடைகள் கருடசேவை மட்டுமின்றி ஆண்டு முழுவதும் திருமலை உற்சவங்களில் பயன்படுத்தப்படும்.
தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மீக திருவிழாவாக போற்றப்படும் ‘திருப்பதி திருக்குடை ஊர்வலம், வருகிற செப்டம்பர் 11-ந் தேதி செவ்வாய்க்கிழமை, காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் புறப்படுகிறது.
கவர்னர் தொடங்கி வைக்கிறார்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரி, வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீவிவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தா மகராஜ் ஆசியுரை வழங்குகிறார்.
திருப்பதி திருக்குடை ஊர்வலம் 16-ந்தேதி தேதி திருமலை செல்கிறது. அங்கு மாட வீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் மதியம் 3 மணிக்கு முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
கட்டணம், நன்கொடைகள் இல்லை
திருப்பதி திருக்குடை தொடர்பாக எவரிடமும் எவ்வித கட்டணமும் தரவேண்டாம். நன்கொடைகள் வாங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.