ஆட்டோவில் ரூ.4 லட்சம் வைர நகையை தவறவிட்ட பெண் போலீசில் புகார்
எழும்பூரில் இருந்து ஆயிரம் விளக்கில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்ற பெண் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைரநகை இருந்த கைப்பையை ஆட்டோவில் தவற விட்டார்.;
சென்னை,
சென்னை எழும்பூரை சேர்ந்தவர் யாஷ்மின் (வயது 39). இவர் நேற்று முன்தினம் ஆயிரம் விளக்கில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றார். ஆட்டோவில் இருந்து இறங்கி உறவினர் வீட்டிற்கு சென்ற பின்னர் தான் வந்த ஆட்டோவில் கைப்பையை தவறவிட்டது தெரியவந்தது.
அந்த பைக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் இருந்ததாகவும், அதை கண்டுபிடித்து மீட்டு தரும்படியும் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் யாஷ்மின் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குறிப்பிட்ட ஆட்டோவை தேடி வருகிறார்கள்.