பாளையங்கோட்டையில் வக்கீல் மனைவி உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு
பாளையங்கோட்டையில் வக்கீல் மனைவி உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் வக்கீல் மனைவி உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம் சங்கிலி திருட்டு
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி உலகம்மாள் (வயது 40). இவர்களின் மகள் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். பள்ளி முடிந்தவுடன் நேற்று மாலை உலகம்மாள் தனது மகளை மொபட்டில் அழைத்து வந்து கொண்டு இருந்தார். சமாதானபுரம் அருகே வந்த போது, மொபட் பின்னால் வந்த மர்ம நபர்கள், உலகம்மாள் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
மற்றொரு சம்பவம்
பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் வக்கீல் ஜோயல். இவருடைய மனைவி விமலா (37). இவரின் மகள் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். நேற்று மாலை மகளை அழைத்து கொண்டு மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். கோர்ட்டு அருகே சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் விமலா அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.