நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் துணைவேந்தரிடம், மாணவர்கள் மனு
கல்லூரி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம், மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.;
பேட்டை,
கல்லூரி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம், மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கல்லூரி மாணவர்கள்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி திரண்டு நின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி துணைவேந்தரிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள், துணைவேந்தர் பாஸ்கரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழில் எழுத அனுமதி
அந்த மனுவில், “பி.ஏ. வரலாறு, வணிகவியல் பாடங்களை ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் இதுவரை தமிழில் தேர்வு எழுதி வந்துள்ளோம். தற்போது ஆங்கில வழி மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 4 பருவ தேர்வுகளை தமிழ் வழியில் எழுதி இருக்கிறோம். இதனால் இறுதி ஆண்டில் ஆங்கில வழியில் தேர்வு எழுதுவது சிரமமாக இருக்கும். எனவே புதிய நடைமுறையை ரத்து செய்து விட்டு, பழைய முறைப்படி தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.