தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் விசாரணை ஆணையத்தில் இதுவரை 24 பேர் வாக்குமூலம்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, ஒருநபர் விசாரணை ஆணையத்தில் இதுவரை 24 பேர் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, ஒருநபர் விசாரணை ஆணையத்தில் இதுவரை 24 பேர் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
அவர் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. கடந்த 9-ந்தேதி 2-வது கட்டமாக விசாரணை நடந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட 10 பேர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
24 பேர் வாக்குமூலம்
கடந்த 27-ந்தேதி முதல் 3-வது கட்டமாக தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணை நேற்று முடிவடைந்தது. 3-வது கட்ட விசாரணையில், மொத்தம் 14 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதன்மூலம் ஒருநபர் ஆணையத்தில் இதுவரை 24 பேர் தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.