திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2018-08-29 22:15 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.

ஆவணி திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பரதாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. கொடிப்பட்டத்தை கோபி அய்யர் கையில் ஏந்தியவாறு, யானையில் அமர்ந்து எட்டு வீதிகளின் வழியாக கோவிலுக்கு கொண்டு சென்றார்.

8-ந்தேதி, தேரோட்டம்

விழாவில் கோவில் இணை ஆணையர் பாரதி, உள்துறை கண்காணிப்பாளர்கள் சொர்ணம், வெள்ளைச்சாமி, 14 ஊர் செங்குந்த முதலியார் உறவின்முறை தலைவர் சிவராமலிங்கம், செயலாளர் அய்யனார், பொருளாளர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் திருநாளான வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்