3 வயது சிறுமியை கடத்தியதாக வடமாநில வாலிபரை பொதுமக்கள் கட்டிவைத்து தாக்குதல்
கீழ்பென்னாத்தூர் அருகே 3 வயது பெண் குழந்தையை கடத்தியதாக மனநிலை சரியில்லாத ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கீழ்பென்னாத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவரது 3 வயது பெண் குழந்தை நேற்று வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது ராஜஸ்தான் மாநிலத்தை வாலிபர்கள் 3 பேர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த குழந்தையிடம் நைசாக பேசி தூக்கிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூச்சலிட்டனர். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் குழந்தையுடன் ஓடிய வாலிபரை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த நபரை கயிற்றால் கட்டி வைத்து தாக்கினர். உடன் வந்த 2 பேர் ஓடி விட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை கடத்தியதாக கூறப்படும் வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு பொதுமக்களே சேர்த்தனர்.
இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார். அதில் கீழ்பென்னாத்தூர் பகுதியில் செல்போன் கோபுரம் பழுதுபார்க்கும் பணிக்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நபரும் வந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.