மாநகராட்சி பகுதிகளில் ‘அம்ரூத்’ திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி கலெக்டர் ஆய்வு
வேலூர் மாநகராட்சி பகுதிகளில், ‘அம்ரூத்’ திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணியை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர்,
வேலூர் மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் அபிவிருத்தி (‘அம்ரூத்’) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள காட்பாடி கல்புதூர், பள்ளிக்குப்பம், அரியூர், சித்தேரி, ஓட்டேரி திருக்குறள் நகர், வேலூர் முத்துமண்டபம் டோபி காலனி, கழிஞ்சூர் இ.பி. காலனி உள்பட 16 இடங்களில் ரூ.234 கோடியே 93 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி ஆகியவை நடந்து வருகிறது. இந்தத் தொட்டிகளில் 157 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் சேகரிக்கப்பட உள்ளது.
ஓட்டேரி திருக்குறள் நகரில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சித்தேரி பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், வேலூர் முத்துமண்டபம் அருகேயுள்ள டோபி காலனியில் 7½ லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்த்தேக்கத் தொட்டிகளின் கட்டுமானப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் தொட்டிகள் தரமாக கட்டப்படுகிறதா? எனப் பார்வையிட்டார். கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்கும் படி ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினார்.
அதேபோல் ஓட்டேரி அருகே மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் நுண் உரம் செயலாக்க மையத்தையும் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சுந்தரம், உதவி செயற்பொறியாளர் நித்யானந்தன், உதவி பொறியாளர் மோகன், மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.