ரூ.1¾ கோடி தங்கத்துடன் தலைமறைவான நகை வடிவமைப்பாளருக்கு போலீஸ் வலைவீச்சு
ரூ.1¾ கோடி தங்கத்துடன் தலைமறைவான நகை வடிவமைப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர்.;
மும்பை,
ரூ.1¾ கோடி தங்கத்துடன் தலைமறைவான நகை வடிவமைப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.1¾ கோடி தங்கம்
தென்மும்பை பகுதியில் ஓம்பிரகாஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் மயங் சோனி என்ற நகை வடிவமைப்பாளரிடம் தங்க கட்டிகளை கொடுத்து நகைகள் செய்வது வழக்கம். சமீபத்தில் ஒம்பிரகாஷ், மயங் சோனியிடம் நகைகள் செய்வதற்காக ரூ.1¾ கோடி மதிப்பிலான 5 கிலோ தங்க கட்டிகளை கொடுத்துள்ளார்.
இதற்கு மயங் சோனி கடந்த 8-ந் தேதிக்குள் நகைகள் செய்து தருவதாக அவரிடம் உறுதி அளித்து இருந்தார்.
தலைமறைவானவருக்கு வலைவீச்சு
இதன்படி கடந்த 8-ந் தேதி ஓம்பிரகாஷ், நகைகள் வாங்குவதற்காக மயங் சோனியின் பட்டறைக்கு வந்தார். அப்போது நகை பட்டறை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது செல்போனுக்கு போன் செய்தார். ஆனால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசமுடியவில்லை. எனினும் அவர் திரும்பி வருவார் என ஓம்பிரகாஷ் நம்பி இருந்தார். ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து எல்.டி. மார்க் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.1¾ கோடி தங்கத்துடன் தலைமறைவான நகை வடிவமைப்பாளரை தேடி வருகின்றனர்.