10-ம் வகுப்பு மறுதேர்வு முடிவு வெளியீடு 23.66 சதவீத மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்ச்சி

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு மறுதேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 23.66 சதவீத மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.;

Update: 2018-08-29 22:00 GMT
மும்பை, 

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு மறுதேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 23.66 சதவீத மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.

மறுதேர்வு முடிவு

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் சுமார் 1¾ லட்சம் பேர் தோல்வி அடைந்தனர். இவர்களுக்கு கடந்த மாதம் மறுதேர்வு நடந்தது.

இந்த தேர்வை புனே, நாக்பூர், அவுரங்காபாத், மும்பை, கோலாப்பூர், அமராவதி, நாசிக், லாத்தூர், கொங்கன் ஆகிய 9 கல்வி மண்டலங்களை சேர்ந்த 1 லட்சத்து 21 ஆயிரத்து 59 பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 84 ஆயிரத்து 860 பேர் மாணவர்கள். 36 ஆயிரத்து 199 பேர் மாணவிகள்.

அவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களுக்கான தேர்வை எழுதினர். இந்த நிலையில் மறுதேர்வு முடிவுகளை நேற்று மாநில கல்வி வாரியம் வெளியிட்டது.

மும்பையில்...

இதில், மறுதேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 28 ஆயிரத்து 645 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 23.66 சதவீதம் ஆகும். மாணவர்களில் 18 ஆயிரத்து 852 பேரும், மாணவியரில் 9 ஆயிரத்து 793 பேரும் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

குறிப்பாக மும்பையில் மறுதேர்வை எழுதிய 33 ஆயிரத்து 397 மாணவர்களில் 4 ஆயிரத்து 747 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இதன் தேர்ச்சி விகிதம் 14.21 ஆகும். இதர மண்டலங்களில் புனே 23.73, நாக்பூர் 27.14, அவுரங்காபாத் 32.83, கோலாப்பூர் 17.12, அமராவதி 31.77, நாசிக் 29.35, லாத்தூர் 28.50, கொங்கன் 18.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்