லாரி கவிழ்ந்ததால் மணலில் சிக்கி மேற்பார்வையாளர் பலி

லாரி கவிழ்ந்ததால் மணலில் சிக்கி மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-08-29 22:00 GMT

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 25). இவர் கல்பாக்கம் அணு சக்தி துறை வளாகத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை அணுசக்தி துறை வளாகம் மறுசுழற்சி மையத்தில் புதிய கட்டுமான பணியில் லாரிகளில் மணல் கொண்டு வந்து கொட்டும் பணியை அருகில் நின்று மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் டயர் மண்ணில் புதைந்து கவிழ்ந்தது.

இதில் அருகில் நின்ற அரவிந்த் மீது லாரியில் இருந்த மணல் மூடியது. இதில் சிக்கிய அவர் மூச்சுத் திணறி மயங்கி விட்டார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சதுரங்கப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்–இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்