தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உணவகம் நடத்துவோர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உணவகம் நடத்துவோர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 மற்றும் விதிகள் ஒழுங்குமுறைகள் 2011–ன்படி உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர்கள் கொண்டு உணவு பரிமாறுவது, சூடான உணவுப்பொருட்களை பார்சல் செய்து கொடுப்பது குற்றமாகும். உணவக உரிமையாளர்களும், நுகர்வோரும் பிளாஸ்டிக்கில் உணவு பரிமாறுவது மற்றும் சூடான உணவு பொருட்களை பார்சல் செய்வது போன்ற செயல்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவதில்லை.
இதனால் சுற்றுச்சூழலுக்கும், மனித உடல் நலத்திற்கும் தீங்கு ஏற்படும். பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப்பொருட்களை அடைத்து விற்பனை செய்யும்போது பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு பரிமாறும் போது ரசாயன நச்சுப்பொருள் உருவாகி உணவுப்பொருளோடு கலந்து சிறுநீரகத்தை பாதிப்படைய செய்து புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது.
உணவக உரிமையாளர்கள் துணி, சணல் பைகளை உபயோகப்படுத்த வேண்டும். தங்கள் கடை வாசலில் துணிப்பைகள் கிடைக்கும் என்ற அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும், உணவக உரிமையாளர்கள் இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவது இல்லை என்ற அறிவிப்பு பலகையை கண்டிப்பாக வைக்க வேண்டும், உணவு பரிமாறுபவர்கள் வாழை இலைகளில் பரிமாற வேண்டும். மேலும் நுகர்வோர் பார்சல் வாங்க வரும்போது தேவையான பாத்திரங்களை கொண்டு வரவேண்டும். வீட்டில் இருந்து பாத்திரங்கள் மற்றும் பை கொண்டு வரும் வாடிக்கையாளரை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு தள்ளுபடி வழங்க வேண்டும்.
சாலையோர, நடைபாதை உணவு கடைகளில் பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு பரிமாறுவதை தவிர்த்து எவர்சில்வர் தட்டு, பாக்குமட்டை தட்டுகளை பயன்படுத்த வேண்டும், உணவு வணிகர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை தங்கள் நிறுவனத்தில் நுகர்வோர் பார்வைக்கு ஆங்காங்கு தெரியும்படி வைக்க வேண்டும்.
உணவக உரிமையாளர்கள் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துமாறு உத்தரவிடப்படுகிறது. தவறினால் உணவகம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக வழக்கு தொடரப்படும். உணவக உரிமையாளர்கள் மீண்டும் அதே தவறை செய்வது பொதுநலத்திற்கு எதிரானது என்பதால் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006–ன்படி உணவகத்தின் உரிமம், பதிவு நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.