10 ஆண்டுகளில் 10 தடவை இடமாற்றத்தை சந்தித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துக்காராம் முண்டேவுக்கு மீண்டும் சிக்கல்
10 ஆண்டுகளில் 10 தடவை இடமாற்றத்தை சந்தித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துக்காராம் முண்டேவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மும்பை,
10 ஆண்டுகளில் 10 தடவை இடமாற்றத்தை சந்தித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துக்காராம் முண்டேவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நாசிக் மாநகராட்சி கமிஷனராக உள்ள அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மாநகராட்சி கமிஷனர்
நாசிக் மாநகராட்சி கமிஷனராக இருப்பவர் துக்காராம் முண்டே. 43 வயதான இவர் 2005-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.பிரிவை சேர்ந்தவர். நவிமும்பை மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார். இதனால் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றார். ஆனால் அரசியல்வாதிகளிடம் பகையை சம்பாதித்தார்.
இதன் காரணமாக அவர் புனே மாநகராட்சியின் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக பணி மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் நாசிக் மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டு பணி செய்து வருகிறார். அரசியல்வாதிகளின் நெருக்கடி காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 10 தடவை அவர் பணி இடமாற்றத்துக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்.
சொத்து வரி உயர்வு
பா.ஜனதா அதிகாரம் செலுத்தி வரும் நாசிக் மாநகராட்சியில், ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் தற்போது துக்காராம் முண்டேக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மாநகராட்சியின் நிர்வாக சீர்திருத்தத்தை காரணம் காட்டி சொத்து வரியை அவர் உயர்த்தினார்.
சொத்து வரியை அவர் கடுமையாக உயர்த்தி விட்டதாக கூறி அவருக்கு எதிராக பா.ஜனதா கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானம் வருகிற 1-ந் தேதி மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் விவாதத்துக்கு வர உள்ளது.
ஆதரவு பேரணி
திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் பா.ஜனதா கவுன்சிலர்களுக்கு கமிஷன் கிடைக்காத காரணத்தினால் தான் அவர்கள் கமிஷனர் துக்காராம் முண்டேக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி குழு தலைவர் கஜானன் செலார் குற்றம்சாட்டி உள்ளார்.
இதற்கிைடயே துக்காராம் முண்டேக்கு ஆதரவாக நாசிக்கை சேர்ந்த மக்கள் மாநகராட்சியை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
அடிபணிய மாட்டேன்
இந்த பிரச்சினை குறித்து மாநகராட்சி கமிஷனர் துக்காராம் முண்டேயிடம் கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், “என்னை எத்தனை தடவை இடமாற்றம் செய்தாலும் கவலையில்லை. மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். யாருடைய நெருக்கடிக்கும் அடிபணிய மாட்டேன்” என்றார்.