மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் புதுவை வருகை - நாராயணசாமி தகவல்

அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக அடுத்த மாதம் (செப்டம்பர்) புதுச்சேரிக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வருகிறார் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2018-08-30 00:00 GMT

புதுடெல்லி,

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது அவர், புதுவை மாநிலத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள வருமாறு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அவர் அடுத்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் புதுச்சேரி வந்து அரசு விழாக்களில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:–

நான் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து புதுவை மாநில அரசியல் நிலவரம் குறித்தும், நிர்வாகம் குறித்தும் பேசினேன். மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏனாம் பகுதி பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய குழுவை அங்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இடைக்கால நிவாரணமாக ஏனாம் பகுதிக்கு ரூ.15 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

புதுவை மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். புதுவை மாநிலத்திற்கு உள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்