கூட்டுறவு சங்க தேர்தல்: அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களை பிடுங்கி சென்றதாக 15 பேர் மீது வழக்கு

ஒட்டன்சத்திரம் அருகே வாடிப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களை பிடுங்கி சென்றதாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2018-08-29 22:45 GMT

ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் அருகே வாடிப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தின் தேர்தலையொட்டி நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது அடையாளம் தெரியாத 10 பேர் திடீரென கூட்டுறவு சங்கத்துக்குள் புகுந்து அதிகாரிகளிடம் இருந்த வேட்பு மனுக்களை பிடுங்கி சென்றுவிட்டனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர் கார்த்திக்ராஜா கொடுத்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 10 பேர் மீது கள்ளிமந்தயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மண்டவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று முன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது அடையாளம் தெரியாத 5 பேர் உள்ளே புகுந்து அதிகாரிகளிடம் இருந்த வேட்பு மனுக்களை பிடுங்கி சென்றுவிட்டனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர் துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 5 பேர் மீது அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்